டெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை (பிப். 24) போரை தொடங்கியது. தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில், ஏழாம் நாளான இன்றும் (மார்ச் 2) உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, மத்திய அரசு உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய நிலவரம் குறித்து விவரிக்க டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அறிவுறுத்தலுக்கு பின்...
அப்போது அவர் கூறுகையில், "எங்களின் (இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் - MEA) அறிவிப்பிற்கு பிறகு உக்ரைன் எல்லையை சுமார் 17 ஆயிரம் இந்தியர்கள் கடந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியத் தூதரகத்தில் பதிவுசெய்யாத இந்தியர்களும் இதில் அடக்கம். ஆப்ரேஷன் கங்கா செயல்திட்டத்திலும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
மேலும், உக்ரைன் நாட்டின் இரண்டாம் பெரிய நகரமான கார்கீவ்வில் இருந்து இந்திய மாணவர்கள் உக்ரைன் நேரப்படி மாலை 6 மணிக்குள் (இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்குள்) வெளியேறும்படி இந்தியத் தூதரகம் தெரிவித்தது. அருகிலிருக்கும் நகரங்களுக்கு வாகனங்கள் மூலமாகவோ அல்லது வாகனங்கள் கிடைக்காதப்பட்சத்தில் நடந்தோ செல்லும்படி அவசர உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, தலைநகர் கீவ்விலிருந்தும் உடனடியாக வெளியேறும்படி இந்தியத் தூதரகம் நேற்று (மார்ச் 1) அறிவித்திருந்தது. இதையடுத்து, கீவ் நகரில் இருந்த இந்தியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிசெய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உக்கிரமடையும் உக்ரைன் போர்: மற்றொரு இந்திய மாணவர் உயிரிழப்பு