சோலாபூர் : மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாருடனான சந்திப்பு ரகசியம் இல்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்து உள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆதரவு எம்.எல்.ஏக்களை திரட்டிக் கொண்டு ஆளும் பாஜக - ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் கடந்த ஜூலை மாதம் இணைந்த அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அஜித் பவார் மற்றும் அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கு இலாகா ஒதுக்குவதில் தொடர் இழுபறி நீடித்த வந்த நிலையில், ஒருவழியாக இறுதி செய்யப்பட்டது. துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை ஒதுக்கப்பட்டது. அதேபோல் அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன.
குறிப்பாக தனஞ்செய முண்டேவுக்கு விவசாயம், திலீப் வால்சே பாட்டீலுக்கு கூட்டுறவு, ஹசன் முஷ்ரீப் மருத்துவக் கல்வி, அதிதி தாட்கரேவுக்கு பெண்கள் மட்டும் குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், அஜித் பவார் - சரத் பவார் இடையே ரகசிய சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியானது.
அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்னர் இரண்டு முறைக்கு மேல் சரத் பவாருடன், அஜித் பவார் ஆலோசனை நடத்தி இருந்தார். இருப்பினும் அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பின்னர் இரண்டு தலைவர்களும் சந்தித்துக் கொண்ட நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணியில் சரத் பவாரை இணையுமாறு, அஜித் பவார் வலியுறுத்தியதாக கூறப்பட்டது. இருப்பினும், அஜித் பவாரின் தீர்மானத்தை சரத் பவார் நிராகரித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தனது தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்காது என சரத் பவார் தெரிவித்து உள்ளார். இது குறித்து பேசிய சரத் பவார், பாஜகவுடனான எந்த தொடர்பும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அரசியல் கொள்கைக்கு பொருந்தாது என்றார்.
ஆனால் சில நலம் விரும்பிகள் தன்னை சமாதானப்படுத்த முயற்சிப்பதாகவும், ஆனால் பாரதிய ஜனதா கட்சியுடன் ஒருபோதும் இணையப் போவதில்லை என்றும் சரத் பவார் கூறி உள்ளார். மேலும், அஜித் பவாருடனான தனது சந்திப்பு இரகசியமானது அல்ல என்றும் அவர் தனது மருமகன் மற்றும் தான் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்றும் சரத் பவார் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : சரத் பவார் - அஜித் பவார் திடீர் சந்திப்பு... மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் புயல் வீசுமா?