மும்பை: மகாராஷ்டிரா முதமைச்சர் வீட்டின் முன்பு ஹனுமன் சாலீசா என்ற மந்திரத்தை கூறப்போவதாக பெண் எம்பி நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவரும் எம்எல்ஏவுமான ரவி ராணா இருவரும் அறிவித்தனர். இதற்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில், ஏப்ரல் 23ஆம் தேதி இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், இரு பிரிவினரிடையே மத விரோதத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இருவரும் ஜாமீன் கோரினர்.
ஆனால், நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணை ஏப். 29ஆம் தேதி நடத்தப்படும் என்று கூறி, இருவரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி ரவி ராணா ஆர்தர் ரோடு சிறைக்கும், நவ்நீத் ராணா பைகுல்லா சிறைக்கும் அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில், நவ்நீத் ராணா, மகாராஷ்டிராவின் கார் காவல்நிலையத்தில் சாதி பாகுபாடு உள்ளதாகவும், தான் பட்டியலின பெண் என்பதால் குடிக்க தண்ணீர் கொடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், "நான் ஏப்ரல் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டு, கார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். இரவு முழுவதும் அங்கேயே அடைக்கப்பட்டேன். குடிக்க தண்ணீர் கேட்டேன். ஆனால், அங்கிருந்த அதிகாரிகள் நான் பட்டியலின பெண் என்பதால் கொடுக்கவில்லை.
குளியலறைக்கு செல்ல அனுமதி கேட்டேன். ஆனால், தாகத வார்த்தைகளால் திட்டி அனுமதிக்க மறுத்துவிட்டனர். எனவே, மும்பை காவல் ஆணையர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிகளை ஈர்த்த மாணவன்... ஆபாச படங்களை காட்டி மிரட்டியதால் கைது...