பாட்டியாலா: பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 1988ஆம் ஆண்டு, குர்மான் சிங் என்பவரை தாக்கியது தொடர்பான வழக்கில், பஞ்சாப் முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, கடந்த மே 19ஆம் தேதி ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
34 ஆண்டுகள் பழைய வழக்கில், சித்து சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சித்து சிறையில் மெளன விரதத்தை தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக சித்துவின் மனைவி நவ்ஜோத் கெளர், சித்துவின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், நவராத்திரியை ஒட்டி சித்து ஒன்பது நாட்கள் மெளன விரதம் இருப்பதாகவும், விரதம் முடிந்து அக்டோபர் 5ஆம் தேதிதான் பார்வையாளர்களை சந்திப்பார் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், முன்னாள் அமைச்சர் பாரத் பூஷண் ஆஷுக்கு எதிரான வழக்கில் சாட்சி சொல்ல மறுப்பு தெரிவிக்கும் வகையில் தான் சித்து இந்த மெளன விரதத்தை தொடங்கியிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.