உத்தரகாசி : உத்தரகாண்ட் மாநிலம் உத்திரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யரா சுரங்கத்தில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி கடந்த 17 நாட்களாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியின் 16 வது நாளான நேற்று (நவ. 27) இயந்திரம் மூலம் இடிபாடுகளைத் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு, தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி நடைபெற்றது.
ஏறத்தாழ 24 மணி நேரம் தொடர்ந்த இந்த பணியில் 24 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, எலிவளை சுரங்க முறையில் துளையிட்டு சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் 2 மீட்டர் தூரத்தில் சிக்கி உள்ளதாகவும் விரைவில் மீடக்ப்படுவார்கள் என்றும் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிரிவித்து உள்ளனர்.
சுரங்கத்தில் இருந்து மீட்கப்படுபவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சுரங்கத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சமுதாய சுகாதார மையத்தில் 41 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவசர உதவிகளுக்கு இந்திய விமானப் படையின் சின்னூக் ரக ஹெலிகாப்டர் மீட்பு பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அவசர சிகிச்சை தேவைப்படும் தொழிலாளிகள் உடனடியாக சின்னூக் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு நகர மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்தது.
இந்நிலையில், இரவு நேரத்தில் சின்னூக் ஹெலிகாப்டரால் பறக்க இயலாது என அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. சுரங்கம் இருக்கும் பகுதியில் மோசமான வானிலை நிலவி வரும் நிலையில், மாலை 4.30 மணிக்கு மேல் அவசர உதவி தேவைப்படும் தொழிலாளர்களை சின்னூக் ஹெலிகாப்டரில் கொண்டு செல்ல முடியாது எனக் கூறப்படுகிறது.
அதேநேரம், மிக அவசர சிகிச்சை தேவைப்படும் தொழிலாளர்களை ரிஷிகேஷ் கொண்டு செல்ல ஒன்றிரண்டு ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : 2 மீட்டர் தூரத்தில் 41 உயிர்கள்! 4 மணி நேரத்தில் மீட்பு பணி நிறைவு? - தேசிய பேரிடர் மீட்பு படை கூறுவது என்ன?