புதுச்சேரி: புதுச்சேரியில் பல ஆண்டுகளாக இருக்கும் மாநில அந்தஸ்து பிரச்னை, தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இதுகுறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வருத்தம் தெரிவித்ததும், அதற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விளக்கம் அளிப்பதும், இதனிடையே புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எதிர் கருத்துகளை தெரிவிப்பதும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள தனது வீட்டில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி மாநில நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அறைகள் கட்டுவதற்காக, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மாநில அந்தஸ்து பெறுவதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை வழங்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி கூறியது புரியாத புதிராக உள்ளது. நீதிபதிகளிடம் இந்த கோரிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி வைத்திருக்கக் கூடாது.
யாரிடம் என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என தெரியாமல் முதலமைச்சர் தள்ளாடுகிறார். மாநில அந்தஸ்து கோரி, மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைக்கிறார். ஆனால் அதன் பின் பாஜக தலைவர் சாமிநாதன், மாநில அந்தஸ்து தேவையில்லை என கூறுகிறார்.
மாநில அந்தஸ்து கிடைக்கிறதோ இல்லையோ, தனது நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதில் முதலமைச்சர் ரங்கசாமி குறியாக உள்ளார். மாநில அந்தஸ்து தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி பிரதமரை சந்தித்தாரா? புதுச்சேரி மக்களை என்ஆர் காங்கிரஸ் அரசும், பாஜகவும் ஏமாற்றுகிறது. புதுச்சேரிக்கு மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் வழங்கியதாக பாஜக பொய் கூறி வருகிறது.
பொய் பிரச்சாரம் செய்வதில் பாஜகவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கலாம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில், பாஜகவும் என்ஆர் காங்கிரசும் மக்களை ஏமாற்றுகிறார்கள். மாநில அந்தஸ்துக்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தவில்லை. பிரதமரை சந்திக்கவில்லை. மக்களை முதலமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து ஏமாற்றி, தனது நாற்காலியை தக்க வைத்துக் கொள்கிறார்.
மேலும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் முறை கூடாது என சட்டத்துறை அமைச்சர் கிரண், பொய்யான தகவலை கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அதைப் பற்றி வெளியில் பேசக் கூடாது.
ஆனால் மத்திய அரசு, மத்திய அமைச்சர்கள் மூலம் பேசி வருவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகும். இந்த அரசு செயல்படாத அரசாக உள்ளது. புதுச்சேரிக்கு நிதி கொடுக்கக் கூடாது என்பது பாஜகவின் கொள்கை” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: Consumer Court: 'நுகர்வோர்' என்பவர் யார்? அரியலூர் கோர்ட் தடாலடி தீர்ப்பு