புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களைச்சேர்ந்த ஏழை, எளிய மக்கள் தினந்தோறும் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்குச்சென்று இலவசமாக மருத்துவம் பார்த்து பயனடைந்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் அன்றாடப் பணிகளான சுத்தம் செய்தல், சமையல் வேலை, துணிகளை துவைத்தல் மற்றும் பார்பர் வேலை உள்ளிட்ட அன்றாடப் பணிகளில் சுமார் 550-க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள அடிப்படை சம்பளமான 18 ஆயிரம், மற்றும் அகவிலைப்படி உயர்வு 6ஆயிரம் ரூபாய் என 24 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று 3ஆம் நாளாக ஜிப்மர் நிர்வாக அலுவலகம் முன்பு சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தரையில் அமர்ந்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களின் இந்தப்போராட்டத்தால் ஜிப்மர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் அன்றாடப்பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டவுடன் பொதுமக்களும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையே இன்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானது. இக்கோரிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து முன் வைக்கப்படும்’ என்று பேசினார். அப்போது அவருடன் புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உடனிருந்தார்.
இதையும் படிங்க: குலசை தசரா விழாவில் ஆடல் பாடலுக்குத் தடை - உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு