டெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஊடகங்களில் வந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இது குறித்து, நாட்டின் பாதுகாப்புச் செயலர், உள் துறைச் செயலர், நாகலாந்து தலைமைச் செயலர், நாகலாந்து காவல் துறைத் தலைமை இயக்குநர் ஆகியோர் ஆறு மாதங்களில் விளக்கமளித்து அறிக்கைத் தாக்கல்செய்யக் கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
14 பேர் உரியிழப்பு
நாகலாந்தின் மோன் (Mon) மாவட்டத்தின் ஓட்டிங் கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 நாகா பழங்குடியின இளைஞர்கள் உயிரிழந்தனர்.
அவர்கள் தேசிய சோஷியலிஸ்ட் நாகலாந்து கவுன்சில் (NSCN) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். எதிர்த் தாக்குதலாக, பாதுகாப்புப் படையினரின் வாகனங்களுக்கு கிராம மக்கள் தீவைத்தனர். அதில், ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தார்.
அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம்
இந்தத் தாக்குதல் சம்பவத்தை நாகலாந்து மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் துரதிருஷ்டவசமான சம்பவம் எனக் குறிப்பிட்டு தங்களின் வருத்தத்தைத் தெரிவித்திருந்தனர். தாக்குதல் குறித்து விசாரிக்க உயர்மட்ட சிறப்பு விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இப்பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதையடுத்து, மாநிலங்களவையில் அமித் ஷா நேற்று (டிசம்பர் 6) விளக்கம் அளித்து அறிக்கை சமர்ப்பித்தார்.
அதில், நாகலாந்து சம்பவத்திற்கு மத்திய அரசு மிகவும் வருந்துகிறது எனவும், துரதிருஷ்டவசமான இந்தச் சம்பவம் தவறான அடையாளத்தால் நடந்துள்ளதாகவும் அமித் ஷா வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கர்நாடகா பள்ளியில் கரோனா தாண்டவம்; 107 பேருக்கு தொற்று