கல்சி: 'எனது தொலைப்பேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன. இதுதொடர்பாக சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப் போவதாக' மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பரப்புரை ஒன்றில் மம்தா பேசியதாவது:
"எனது தொலைப்பேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுகிறன. பாஜக தான் இதுபோன்ற சதி வேலைகளில் ஈடுபடும். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நிகராக எந்தவொரு முன்னேற்ற திட்டங்களையும் பாஜகவால் கொண்டு வர முடியாது.
அவர்கள் நாள்தோறும் நாங்கள் பேசுவதை ஒட்டுக்கேட்கிறார்கள். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த சிஐடி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை விடமாட்டேன்.
இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். சில இடைத்தரகர்களுடன் இணைந்து மத்திய அரசு இந்தச் செயலில் ஈடுபடுகிறது.
நான் பேசியதாக உலா வரும் ஆடியோ உண்மையில்லை. ஒரு முதலமைச்சரின் தொலைப்பேசியை உரையாடல்களை மத்திய அரசு ஒட்டுக்கேட்பது ஆச்சரியமாக உள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளில் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற்ற நான்காம் கட்ட வாக்குப்பதிவின் போது கூச் பெகர் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை துப்பாக்கி சூடு நடத்தியது.
இதில், இறந்தவர்களின் உடலை வைத்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ளுமாறு அந்தப் பகுதி திரிணாமுல் காங்கிரஸ் தலைவரிடம் மம்தா பானர்ஜி பேசுவது போன்று ஆடியோ ஒன்று வெளியானது. இதைத் தொடர்ந்து இதற்கு மறுப்பு தெரிவித்த மம்தா, இந்த விவகாரம் தொடர்பாக சி.ஐ.டி. விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மேற்கு வங்கத் தேர்தல்: 5ஆம் கட்ட பரப்புரையில் அரங்கேறிய நாடகம்