டெல்லி: நாட்டின் பெரிய தங்க நகைக்கடன் நிதி நிறுவனமான முத்தூட் தலைவர் எம் ஜி ஜார்ஜ் தேசிய தலைநகர் டெல்லியில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 72.
எம் ஜி ஜார்ஜ், டெல்லி மணிபால் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர் ஆவார். தனது இளம்வயதில் முத்தூட் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக 1979ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் சிறிய நகைக்கடன் நிறுவனமாக தொடங்கப்பட்ட முத்தூட் நிறுவனத்தை உள்ளூர் மட்டுமின்றி உலகளவில் விரிவுப்படுத்தினார்.
இவரது தலைமையில் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளை முத்தூட் பரப்பியது. மேலும் ஆயிரம் கோடி நிகர லாபம் ஈட்டிய நிறுவனம் என்ற பெருமையையும் முதன்முதலாக பெற்றது. நகைக்கடன் வழங்குவது தவிர 20க்கும் மேற்பட்ட பிற தொழில்களிலும் முத்தூட் ஈடுபட்டுவருகிறது.
2011ஆம் ஆண்டு போர்ப்ஸ் ஆசியா இதழில் வெளியான 50 பணக்காரர்கள் பட்டியலில் எம் ஜி ஜார்ஜ் 44ஆவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.