புதுச்சேரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தான் வெற்றிபெற்றால் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தப்படும், மாநிலம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்றார். ஆனால், வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனதுடன் நான் ஒன்றும் ராஜா இல்லை என்று சொல்வது ஏற்புடையதல்ல என்று கூறினார்.
பொறுப்பற்ற ஆட்சி
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு அமைந்து பல மாதங்களாகியும் இதுவரை தேவையான நிதி புதுச்சேரிக்கு வரவில்லை; புதுவையில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக உள்ளது என்று கூறினார்.
அத்துடன் அரசுத் துறைகளில் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும், அதே போன்று அரசு வேலைகளில் உள்ளவர்களுக்குச் சரிவர ஊதியம் வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
பொங்கல் முடிந்த பின்பும் கூட, பரிசாக அறிவித்த பொருள்களை அரசு தரவில்லை என்றார். டிசம்பரில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக இருந்தது, ஜனவரியில் 20ஆம் தேதியில் 3,000-ஐ தொட்டது. இதற்குக் காரணம் மக்களைப் பற்றிச் சிந்திக்காத பொறுப்பற்ற முறையில் ரங்கசாமி ஆட்சி செய்வதாகக் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து, புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் ஒரு பக்கமும் முதலமைச்சர் மறுபக்கமும் என்று போட்டிப் போட்டு ஆட்சி நடத்துகின்றனர். மேலும், துணைநிலை ஆளுநருக்கு என்று சில வரைமுறைகள் உள்ளது. சில நேரங்களில் அதையும் மீறி தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
விரைவில் விசாரணை
மேலும், புதுச்சேரி மாநில கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தான் துணைநிலை ஆளுநர் என்பதை மறந்துவிட்டு பாஜக கட்சி விழாவில் அவர் கலந்து கொள்வது ஏற்புடையதல்ல என்றும் கூறினார்.
புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்கல் மற்றும் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும் போராட்டங்கள் நடத்தப் போவதாகத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் ஊழல் அமைச்சர்களைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் -இ.பி.எஸ் இருவரும் விரைவில் விசாரிக்கப் படலாம் என்றார்.
அதேவேளை, தமிழ்நாட்டில் பொங்கலுக்குத் தரமான பொருள் வழங்கப்பட்டுள்ளது. தவறு நடந்த ஒரு சில இடங்களில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முத்தரசன் கூறினார்.
இதையும் படிங்க: சென்னைப் பல்கலைக் கழகத்தேர்வில் முறைகேடு - விசாரணை செய்ய 5 பேர் கொண்ட குழு அமைப்பு