மும்பை: மும்பை தாதரில் உள்ள சிவாஜி பூங்காவில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் பாலசாகிப் தாக்கரேவின் நினைவிடம் அமைந்துள்ளது.
இதனால் தங்களுக்கு வேறு இடம் வழங்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதில், “பாலசாகிப் தாக்கரேவின் நினைவிடம் சிவாஜி பூங்காவில் இருப்பதால், அங்கு எங்களது பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மாநகராட்சி வேறு இடம் ஒதுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆர்எஸ்எஸ் தனது கடிதத்தில், “1936ஆம் ஆண்டு முதல், சிவாஜி பார்க் மைதானத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தினசரி ஷாகா நடந்துவருகிறது. 1967 ஆம் ஆண்டு முதல் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு நிலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த இடத்தின் சொத்துவரி 01.04.1967 முதல் 2021-22ஆம் ஆண்டு வரை செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை இணைத்து வருகிறோம். பாலசாகிப் தாக்கரேவின் நினைவுச்சின்னத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு எங்களுக்கு வேறு இடம் வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. மாநிலத்தில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பொறுப்பில் உள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : காசியில் ஆர்எஸ்எஸ் தலைவர்.. சாதி, தீண்டாமைக்கு எதிராக அறைகூவல்!