காந்திநகர்: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கோடிக்கான ரூபாய் மதிப்பிலான மெபெட்ரோன் போதைப்பொருள் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், குஜராத் மாநிலம் பருச் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலைக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனடிப்படையில், மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், குஜராத் மாநிலம் விரைந்து சம்பந்தப்பட்ட மருந்து தொழிற்சாலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மூட்டை மூட்டையாக 513 கிலோ மெபெட்ரோன் போதைப்பொருள் சிக்கியது. இதனை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
இதுகுறித்து, மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு டிஎஸ்பி தத்தா நலவாடே கூறுகையில், "இந்த தொழிற்சாலையில் 513 கிலோ மெபெட்ரோனை மீட்டுள்ளோம். இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1,026 கோடியாகும். ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது. தொழிற்சாலையில் உரிமையாளரை தேடி வருகிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒமைக்ரான் தடுப்பூசி தயாரிப்பில் சீரம் மற்றும் நோவாவாக்ஸ்