மும்பை : 2023 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்களின் தரவரிசைப் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. டாப் 10 இடங்களில் இந்தியாவின் முகேஷ் அம்பானி மீண்டும் 9வது இடத்தை பிடித்து உள்ளார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 83 புள்ளி 4 பில்லியன் அமெரிக்க டாலர் என போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் கடந்த ஆண்டை காட்டிலும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டு 90 புள்ளி 7 பில்லியன் அமெரிக்க டாலருடன் முகேஷ் அம்பானி 10 வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மெர், கூகுளின் லேரி பேஜ்ட், செர்ஜே பிரின், பேஸ்புக்கின் மார்க் ஷக்கர்பெர்க், டெல் டெக்னால்ஜிஸ் மைக்கேல் ஆகியோரை விட முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் ஹிண்டன்பெர்க் சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமான இந்தியாவின் மற்றொரு பெரும் தொழிலதிபர் கவுதம் அதானி, உலக பணக்காரர்களின் பட்டியலில் உள்ள இரண்டாவது இந்தியர் என்ற சிறப்பை பெற்றார். உலக பணக்காரர்கள் வரிசையில் அவருக்கு 24வது இடம் வழங்கப்பட்டு உள்ளது. அவரது சொத்து மதிப்பு 47 புள்ளி 2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்டு உள்ளது.
உலக பணக்காரர்கள் வரிசையில் 3 வது இந்தியர் என்ற சிறப்பை தமிழிகத்தை சேர்ந்தவரும் எச்.சி.எல் நிறுவனருமான சிவ் நாடார் பெற்றார். உலக அளவில் அவர் 55வது இடத்தை பிடித்து உள்ளார். அவரது சொத்து மதிப்பு 25 புள்ளி 6 பில்லியன் என கணக்கிடப்பட்டு உள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் உள்ள 2 ஆயிரத்து 640 பில்லியனர்களில் கிட்டத்தட்ட பாதி பேரின் சொத்து மதிப்பு 2022 ஆண்டை காட்டிலும் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த ஆண்டை காட்டிலும் 254 பேர் நடப்பாண்டுக்கான பட்டியலில் இருந்து வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் ரஷ்யா போர், பணவீக்கம் அதிகரிப்பு, மத்திய வங்கிகளின் தொடர் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு, கிரிப்டோகரன்சி சந்தையில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சுழல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையில் வங்கிகளின் தடுமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் உலக பணக்காரர்கள் கடும் சரிவை சந்தித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் உலக பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு 166 இந்தியர்கள் இருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் 169 பேராக அதிகரித்து உள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்த இந்தியர்களின் சொத்து மதிப்பு 675 பில்லியன் டாலராக குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு அது 750 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Today Gold Rate : உச்சம் தொட்ட தங்கம் விலை - விலை உயர்வுக்கு என்ன காரணம் தெரியுமா?