மகாராஷ்டிரா: விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் வழியாகப் பயணித்தது. கடந்த 7ஆம் தேதி முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் யாத்திரை நடைபெற்று வருகிறது.
74ஆவது நாளாக இன்று(நவ.20) மகாராஷ்டிராவின் பெண்ட்வால் மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கியது. இதில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது, ஹிந்தி நடிகரும் இயக்குநருமான அமோல் பலேகர் தனது மனைவியுடன் யாத்திரையில் கலந்து கொண்டார். அவர்களுடன் கைகோர்த்து நடந்த புகைப்படங்களை ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில், அம்மாநிலத்தின் கலாசாரத்தை எடுத்துரைக்கும் வகையில் உடையணிந்திருந்த குழந்தைகளுடன் ராகுல் காந்தி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
அதேபோல், இன்றைய யாத்திரையில் எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களையும் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பாரத் ஜோடோ யாத்திரை இன்றுடன் நிறைவடைகிறது.
இதையும் படிங்க:எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - கொட்டும் மழையில் ராகுல் காந்தி உரை