உத்தரப் பிரதேசம் மாநிலம் பெத்துலில் சிச்சோலி கிராமத்தில் வசிக்கும் பெண்ணின் கையை, அவரது கணவர் வெட்டி வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த மார்ச் 25ஆம் தேதியன்று, கணவர் - மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், வீட்டிலிருந்த கோடாரியை வைத்து மனைவியின் கையை வெட்டிய கணவர், மற்றொரு கையில் மூன்று விரல்களை வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியை அங்கேயே விட்டுவிட்டு, தப்பியோடியுள்ளார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பெண் அளித்த வாக்குமூலத்தின் பேரில், காவல் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாகவுள்ள பெண்ணின் கணவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன் என உ.பி. முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ட்வீட் செய்துள்ளார். அதில், "கடந்த 15 நாள்களாகப் பெண்களைக் குறிவைத்து அரங்கேறும் குற்றச் சம்பவங்கள் மாநிலத்தில் அதிகரித்துள்ளன. கணவர்களால் மனைவிகளுக்குப் பாதிப்பு ஏற்படுவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.
இது ஒரு கொடூரமான குற்றம். இதனைத் தடுப்பதற்குப் புதிய சட்டத்தையும், விழிப்புணர்வு பரப்புரையையும் தொடங்க விரும்புகிறேன். இதுபோன்ற குற்றத்தைச் செய்வதற்கு முன்பு, அவர்கள் ஆயிரம் முறை சிந்திக்க வேண்டிய அளவுக்குத் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புனே பேஷன் தெருவில் தீ விபத்து!