தமோ: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜா பதேரியா, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசும் வீடியோ ஒன்று நேற்று(டிச.12) சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
அதில், "மோடி, தேர்தல் நடைமுறையை மோடி முடிவுக்கு கொண்டு வருவார். சாதி, மதம், மொழி அடிப்படையிலான பிரிவினையை ஏற்படுத்துவார். பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மையின மக்களின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது. அதனால், அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற மோடியை கொல்லத் தயாராக வேண்டும்" என்று பேசியிருந்தார்.
இந்த வீடியோ சர்ச்சைக்குள்ளான நிலையில், மோடியை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற அர்த்தத்திலேயே அவ்வாறு பேசியதாகவும், தான் மகாத்மா காந்தியின் அகிம்சை வழியில் அரசியல் செய்து வருவதாகவும் ராஜா பதேரியா விளக்கம் அளித்திருந்தார். இருப்பினும் பதேரியாவின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ராஜா பதேரியா மீது மத்தியப்பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், ராஜா பதேரியா இன்று கைது செய்யப்பட்டார். ஹாட்டா நகரில் உள்ள பதேரியாவின் இல்லத்துக்கு சென்ற போலீசார், அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.