மத்தியபிரதேசம்: மத்தியபிரதேச மாநிலம் ரைசன் மாவட்டத்தில் சுல்தான்பூர் பகுதியில் நடந்த இரண்டு மதமாற்ற சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த மதமாற்ற சம்பவங்கள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த புகார்கள் குறித்து என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கனுங்கோ விவரிக்கும்போது, "மத்தியப் பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் பகுதியில், மத மாற்றம் தொடர்பாக எங்களுக்கு இரண்டு தனித்தனி புகார்கள் வந்தன. முதல் புகாரில், ஒரு பழங்குடியின குடும்பம் பாதிரியார் ஒருவரால் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது. அவர்களது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.
சில காலத்திற்குப் பிறகு அந்த குடும்பத்தினரால் கிறிஸ்துவ மதத்தை பின்பற்ற முடியவில்லை. மனதளவில் அவர்கள் அசெளகரியமாக உணர்ந்ததால், தேவாலயத்திற்குச் செல்வதை நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கிறிஸ்தவ மதத்தினர் பழங்குடியின குடும்பத்தினரை தாக்கியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் அளித்த புகாரின் பேரில், அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதேபோல், மற்றொரு புகாரில் பெண் குழந்தை கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதோடு சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக குழந்தைகள் நல ஆணையம் எங்களது கவனத்துக்கு கொண்டு வந்தது, மதமாற்றம் நடந்ததையும் உறுதி செய்தது. இது தொடர்பாக பல முறை நாங்கள் அறிவுறுத்திய பிறகு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சம்பவம் நடந்து சுமார் 12 நாட்களுக்குப் பிறகுதான் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது" என்று குறிப்பிட்டார்.
இதனிடையே பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் பணியில் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும், அதற்குப் பிறகு சம்மந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மியூசிக் வகுப்புக்கு சென்ற 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!