ஐதராபாத் : மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்ற தனது மகளின் உடைமைகள் திருடப்பட்டு, பசியின் கொடுமையால் வீதிகளில் தங்கி இருக்கும் அவரை மீட்டுத் தரக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தாய் கடிதம் எழுதி உள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த 37 வயது பெண், சைதா லுலு மின்ஹஜ் சைதி முதுகலை படிக்க அமெரிக்காவின் சிகாகோ சென்ற நிலையில், அவரது பொருட்களை மர்ம நபர்கள் திருடியதாக கூறப்படுகிறது. உடைமைகளை இழந்து நிர்கதியான சைதா, சாலைகளில் வசிக்கத் தொடங்கி உள்ளார். பாதசாரிகளிடம் உணவு வாங்கியும், சில நேரங்களில் அதுவும் இல்லாமல் பட்டினியாகவும் அவர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சைதா தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வெளியானது. ஒருவர் சைதாவிடம் இந்தியில் பெயரை கேட்கும் போது அவர் ஆழ்ந்து சிந்தித்து பதில் கூறுவது போன்றும் சொந்த நாட்டிற்கு மீண்டும் செல்ல விருப்பமா என்று அந்த நபர் கேட்ட போது அதற்கு சைதா தன் பையில் இருந்து உணவுகளை தேடுவது போன்றும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா சென்ற மகள், வீதிகளில் தஞ்சமடைந்து உணவுக்காக போராடி வருவதை அறிந்த சைதாவின் தாயார் பாத்திமா, தனது மகளை மீட்டு மீண்டும் ஐதராபாத்திற்கு கொண்டு வர உதவுமாறு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
மேலும் இந்திய தூதரக அதிகாரிகள் தனது மகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பாத்திமா கோரிக்கை விடுத்து உள்ளார். அமெரிக்கா சென்ற போது பாஸ்போர்ட்டில் இருந்த சைதாவின் புகைப்படமும், தற்போதைய அவரது புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், உடல் மெலிந்து அவர் காணப்படுகிறார்.
இதுகுறித்து பேசிய பாத்திமா, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சைதாவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், அண்மையில் அமெரிக்காவில் இருந்த வந்த இரண்டு பேரிடம் சைதா குறித்து விசாரித்த போது, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சைதாவின் உடைமைகள் திருடு போனதாகவும், அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக தெரிவித்ததாகவும் பாத்திமா கூறி உள்ளார்.
மேலும் கடைசியாக சிகாகோ நகர சாலைகளில் சைதா சுற்றித் திரிவதை கண்டதாக இருவரும் தெரிவித்தாக பாத்திமா கூறினார். சைதாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், விரைந்து நடவடிக்கை எடுத்து சைதாவை சொந்த நாட்டுக்கு அழைத்து வருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க : அமலாக்கத்துறை இயக்குனர் பணி நீட்டிப்பு... உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மத்திய அரசு முறையீடு!