பெலகாவி: ராயபாகா நகரைச் சேர்ந்தவர் இளைஞர் ஹரிபிரசாத் போஸ்லே (வயது 21). இவர் கடந்த மே மாதம் 28அம் தேதி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளார். இந்த சம்பவம் முதலில் இயற்கை மரணமாக கருதப்பட்டதை தொடர்ந்து, மரணத்தில் மர்மம் இருப்பதாக இளைஞரின் உறவினர்கள் ராயபாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். அதை தொடர்ந்து, ராயபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், ஹரிபிரசாத் போஸ்லேவின் கழுத்தில் சில காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மரணம் இயற்கையானது அல்ல என முடிவு செய்த போலீசார் ஹரிபிரசாதின் தாயை முதலில் விசாரித்தனர். விசாரணையில் இளைஞர் ஹரிபிரசாத் போஸ்லேவை அவரது தாய் சுதா போஸ்லே தான் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ராயபாக் எஸ்பி சஞ்சீவ் பாட்டீல் கூறுகையில், "கடந்த மாதம் மே 28ஆம் தேதி மர்மமான முறையில் இறந்த ஹரிபிரசாத் போஸ்லே வழக்கு அவரது உறவினர்களின் புகார் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, தாய் சுதா போஸ்லே தனது மகன் ஹரிபிரசாத் போஸ்லேவை கொலை செய்தது தெரியவந்தது. கொலைக்கு உதவிய வாலிபருடன் வைஷாலி, சுலீனா மானே மற்றும் கவுதம் சுனில் மானே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.
மேலும் சம்பவம் குறித்து கூறுகையில், "இறந்த ஹரிபிரசாத்தின் தாயார் சுதா போஸ்லே, தனது கணவர் சந்தோஷ் போஸ்லேவுடன் ஆறு மாதங்களுக்கு முன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி தனது மகன் ஹரிபிரசாத்துடன் வசித்து வந்துள்ளார். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் ஹரிபிரசாத் தினமும் தனது தாயிடம் சண்டை போட்டு வந்தார்.
மேலும், ஹரிபிரசாத் தாய் சுதா போஸ்லேவின் செயல்பாடு குறித்தும் அவரது தகாத உறவு குறித்தும் தந்தை மற்றும் உறவினர்களிடம் கூறி வந்ததாக கூறப்படுகிறது. எனவே இது குறித்து சுதா தனது மகன் ஹரிபிரசாத்தை பலமுறை எச்சரித்துள்ளார். அதன் பின் மே 28ஆம் தேதி ஹரிபிரசாத் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். அதன்பிறகு, கணவர் சந்தோஷ் மற்றும் உறவினர்களுக்கு போன் செய்த சுதா போஸ்லே, ஹரிபிரசாத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு தூங்கிக்கொண்டிருந்தபோது இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
பின் இந்தச் சம்பவம் குறித்து சந்தேகமடைந்த உறவினர்கள் ராயபாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து உறவினர்கள் வாக்குமூலத்தின்படி, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் தாயே தன் மகனை திருமணம் மீறிய உறவிற்கு இடையூறாக இருந்ததற்காக கொன்றதாகவும், இந்த வழக்கில் மொத்தம் 7 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்” என்றும் தெரிவித்தார். தற்போது, இந்த வழக்கில் ஒரு சிறார் உட்பட மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விசாரணை நடந்து வருகிறது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 5 கொள்ளை; 8 கொலை என தொடர் குற்றங்களில் ஈடுபட்ட சைகோ கொலையாளி கைது!