நரேந்திரபூர்: மேற்கு வங்க மாநிலம் நரேந்திரபூரில் பிறந்த குழந்தையை பணத்திற்காக விற்றதாக கூறப்படும் குழந்தையின் தாய், உள்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் நரேந்திரபூரில் உள்ள ஒரு பெண்ணின் கணவர் நீண்ட நாட்களுக்கு முன் இறந்து விட்டார். அதன் பிறகு வேறொரு ஆணுடன் திருமணத்தை மீறிய தொடர்பு கொண்டதால் இந்தப் பெண் கர்ப்பம் தரித்துள்ளார்.
கணவரை இழந்த பெண் கர்ப்பம் தரித்துள்ளதை அறிந்த அக்கம் பக்கத்தினர், இந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் மனமுடைந்த அப்பெண், தனக்கு பிறந்த குழந்தையை அழிக்க முடிவு செய்து உள்ளார். இந்த விஷயம் குறித்து அறிந்த தபஸ் மோண்டல் மற்றும் சாந்தி மோண்டல் என்ற தம்பதியர், பஞ்சாயர் பகுதியில் வசிக்கும் குழந்தை பேறு இல்லாத ஜூமா மாஜியை அழைத்து இந்தப் பெண்ணின் குழந்தையை தத்தெடுக்கும்படி கூறி உள்ளனர்.
இதனை அடுத்து குழந்தையை தத்தெடுப்பதற்கு ஒப்புக்கொண்ட ஜூமா மாஜி, பிறந்து 11 நாட்களே ஆன கைக்குழந்தையை 2 லட்சம் ரூபாய் கொடுத்து தத்தெடுத்துக் கொண்டனர். மேலும் அந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை ஏற்பாடு செய்வதற்காக ஜூமா மாஜி தனது நிலத்தை விற்றதாகக் கூறப்படுகிறது. பிறந்த குழந்தையை 2 லட்சம் ரூபாய் பணத்திற்கு விற்றதாக போலீசாருக்கு உள்ளூர்வாசி ஒருவர் தகவல் அளித்து உள்ளார்.
இதையும் படிங்க: Gyanvapi Mosque case: தொல்லியல் ஆய்வுக்கான இடைக்கால தடை நீட்டிப்பு - அலகாபாத் உயர்நீதிமன்றம்!
தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் குழந்தையின் தாய், குழந்தையை வாங்கிய ஜூமா மாஜி, தபஸ் மோண்டல் மற்றும் சாந்தி மோண்டல் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில், குழந்தையின் தாய் தனது குழந்தையை விற்கவில்லை என்றும், தனது குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே ஜூமா மாஜியிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து போலீசாரின் விசாரணையில் ஜூமா மாஜி, குழந்தையை வாங்கவில்லை என்றும், குழந்தையின் எதிர்கால நலனுக்காகத்தான் அந்தப் பெண்ணின் குழந்தையை பெற்றேன் எனவும் கூறியுள்ளார். மேலும் குழந்தையின் தாய் பணமில்லாமல் கஷ்டப்பட்டு வருவதால்தான் அவருக்கு 2 லட்சம் பணம் குடுத்தேன் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் இந்த சம்பவத்தின் பின்னணியில் குழந்தை கடத்தல் கும்பல் ஏதும் செயல்படுகிறதா என்ற கோணத்தில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சாவாலா விபத்து வழக்கு: 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!