புதுடெல்லி: தமிழ்நாட்டுக்கு ஜூன் 2 ஆம் தேதி வரை ஒரு கோடிக்கு மேற்பட்ட கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தடுப்பூசி திட்டத்துக்கு கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் மத்திய அரசு உதவி வருகிறது. தடுப்பூசி கிடைப்பதை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காகத், தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குப் பலவிதமான கொள்முதல் வாய்ப்புகளை கடந்த மே 1ஆம் தேதி முதல் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக, சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்தத் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை.
* 2021 ஜூன் 2ம் தேதி வரை, 1 கோடிக்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசி தமிழ்நாட்டுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 93.3 லட்சம் டோஸ் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களிடம் 7.24 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் தற்போது உள்ளன.
* ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசிகளின் மொத்த டோஸ்கள் பற்றிய தகவலும் தமிழ்நாட்டுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 2021 ஜூன் மாதத்தின் முதல் 2 வாரத்தில் தமிழ்நாட்டுக்கு 7.48 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கும். அடுத்த 2 வாரத்தில் கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசின் மூலமாக கிடைக்கும்.
* மொத்தம் கிடைக்கும் கோவிட் தடுப்பூசிகளின் அளவு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சராசரி நுகர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்குப் புதிய தாராளமய விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி உத்தியின் கீழ், தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை குறித்தும், தமிழ்நாட்டுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மூன்றாவது கட்ட தடுப்பூசி திட்டத்தில், 18 முதல் 44 வயது உடையவர்களுக்கு, 2021 ஜூன் மாதத்தில் 16.83 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கின்றன.