கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பான புகாரில், திரிணாமுல் காங்கிரசில் அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜியை கடந்த 23ஆம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவரது நெருங்கிய தோழியான நடிகை அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டார். அர்பிதா முகர்ஜியின் வீட்டிலிருந்து 50 கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள், முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டதையடுத்து பாஜகவினர் திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தனர். இதன் எதிரொலியாக சாட்டர்ஜி திரிணாமுல் காங்கிரசிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். திட்டமிட்டு இந்த வழக்கில் தன்னை சிக்க வைத்துவிட்டார்கள் என்றும், நடிகை அர்பிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் பார்த்தா சாட்டர்ஜி கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று பார்த்தா சாட்டர்ஜி மற்றும் நடிகை அர்பிதா முகர்ஜி இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக ஜோகாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அர்பிதா முகர்ஜி, தனக்கு தெரியாமலேயே தனது வீட்டில் பணம் வைக்கப்பட்டதாக தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட பணம் தங்களுக்கு சொந்தமானது இல்லை என இருவரும் கூறியுள்ளனர்.
இதனிடையே இருவருக்கும் விதிக்கப்பட்ட பத்து நாட்கள் காவல் முடிவடைந்து, நாளை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதையும் படிங்க:மேற்கு வங்கம்: கைது செய்யப்பட்ட பார்த்தா சட்டர்ஜி அமைச்சரவையிலிருந்து நீக்கம்