பாட்னா: கரோனா தடுப்பூசி பயனாளர்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இருப்பதை முன்னாள் பிகார் முதலமைச்சர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜிதன் ராம் மஞ்சி, “கரோனாவ தடுப்பூசி பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சான்றிதழ்களில் குடியரசு தலைவரின் படமோ அல்லது அந்தந்த மாநில முதலமைச்சர்களின் படமோ இடம்பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமரின் படம் குறித்த சர்ச்சை பாஜக ஆட்சி செய்யாத ஜார்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் புகைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
அதே போல பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்கள், தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை தாங்களே ஒப்பந்தப்புள்ளி கோரல் மூலம் எடுத்துக்கொள்கிறோம் என ஒன்றிய அரசுடன் முட்டி மோதி வருகின்றனர்.