மிசோரம் : பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மிசோ தேசிய முன்னணி கட்சி, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர் விவாகரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மணிப்பூர் விவகாரம், பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி கடந்த ஜூலை 26 ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் தாக்கல் செய்தார். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி மக்களவையில் தொடங்கியது.
மக்களவை எதிர்க்கட்சி துணை தலைவரும், அசாம் மாநில எம்.பியுமான கவுரவ் கோகாய், நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து அதன் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார். முதல் நாளில் எதிர்க்கட்சிகள் சார்பில் திமுக எம்.பிக்கள் டி.ஆர் பாலு, திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் விவாதம் நடத்தினர்.
அதேபோல் மத்திய அரசு தரப்பில் எம்.பி. நிஷிகாந்த் துபே, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் விவாதித்தனர். தொடந்து நேற்று (ஆகஸ்ட். 9) நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 2வது நாள் விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக உரையாற்றினர்.
அதேபோல் மத்திய அமைச்சர்கள் ஸ்மிரிதி இராணி, நிர்மலா சீதாராமன், அமித் ஷா உள்ளிட்டோர் தீர்மானத்திற்கு எதிராக உரையாற்றினர். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட். 10) நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 3வது நாள் விவாதம் நடைபெறுகிறது. இன்றைய விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மிசோ தேசிய முன்னணி கட்சி, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிசோரம் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் மிசோ மக்கள் முன்னணியின் மக்களவை தலைவர் லால்ரோசங்கா, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்போவதாக கூறி உள்ளார்.
மணிப்பூரில் ஏற்பட்டு இனக் கலவரத்தை தடுப்பதிலும், மாநிலத்தில் மீண்டும் அமைதியை கொண்டு வரும் முயற்சியை கையாள்வதில் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும், கட்சித் தலைவர் சொரம்தங்காவுடன் கலந்து ஆலோசித்து விட்டு நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் பக்கம் நின்று ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : நம்பிக்கையில்லாத் தீர்மானம் - பிரதமர் மோடி பதிலுரை!