ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனது குடியிருப்பில் இருந்து இன்று காலை (பிப்.2) டிடிபி கட்சியின் செய்தித்தொடர்பாளர் பட்டாபிராம் அலுவலகத்திற்கு புறப்பட்டபோது, 15 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் அவரது காரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்தக் கும்பல் இரும்பு கம்பியால் பட்டாபிராமை தாக்கியதோடு, அவரது காரையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியது.
கண்மூடித்தனமான தாக்குதலில் பட்டாபிராமின் செல்போன் சுக்குநூறாக உடைந்தது. இதில் டிடிபி கட்சியின் செய்தித்தொடர்பாளர் பட்டாபிராம், கால் மற்றும் முழங்கையில் காயம் ஏற்பட்டது. அந்தக் காரை இயக்கிய ஓட்டுநருக்கும் பலத்தக்காயம் ஏற்பட்டது.
இதைப் போலவே ஆறு மாதங்களுக்கு முன்பாகவும் தனக்கு தாக்குதல் நடந்ததாக குறிப்பிட்ட பட்டாபிராம், ஏன் இதுவரை அத்தாக்குதல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார். காவல் துறை இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தகவலறிந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு கண்டனம் தெரிவித்ததோடு, பட்டாமிராமை நேரில் சென்று சந்தித்துள்ளார். இத்தாக்குதல் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் ரெட்டியின் தூண்டுதலின் பேரில் நிகழ்ந்ததுள்ளது என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக துணை காவல் ஆணையர் ஸ்ரீனிவாஸ் ரெட்டியிடம் கேட்டபோது, ’இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவ்வித புகாரும் வழங்கப்படவில்லை. சம்பவம் குறித்த தகவல் மட்டுமே கிடைத்தது. கட்சி அலுவலகத்திற்கு 100மீ தொலைவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தவுள்ளோம்’ என்றார்.
இதையும் படிங்க:முதலமைச்சரைத் தெரியும் எனக்கூறி ரூ. 33 லட்சம் மோசடி