கொல்கத்தா : ஒடிசா மாநிலம் பாலசோரில் நிகழ்ந்த ரயில்கள் விபத்தில், இரண்டு ரயில்களின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர், கார்டு ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஒடிசா மாநிலம் பாலசோரில் நடப்பு நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து எனக் கூறப்படும் கோரமண்டல் உள்ளிட்ட மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவம், நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் சிக்கி 280க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், 700க்கும் அதிகமான மக்கள் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படாதது பெரும் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து மனித தவறால் ஏற்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்ற பெருத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.
ரயில்கள் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அரசு ஒருபோதும் கைவிடாது என்றும், உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் என பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றார். இதுதவிர ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணமாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்து உள்ளார்.
இந்நிலையில் இந்த கோர ரயில் விபத்தில், ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர், ரயில்வே கார்டு ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். பக்க இருப்பு பாதையில் நுழைந்து விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர், ரயில்வே கார்டு ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
அதேபோல், தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் மோதி விபத்துக்குள்ளான பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும், மூன்று பேரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தென் கிழக்கு ரயில்வேயின் மூத்த கோட்ட வணிக மேலாளர் ராஜேஷ் குமார் தெரிவித்து உள்ளார். அதேநேரம் சரக்கு ரயிலின் ஓட்டுநர் மற்றும் கார்டு காயங்களின்றி உயிர் தப்பியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : PM Modi : ரயில்கள் விபத்துக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை... பிரதமர் மோடி!