போகாரா : ஜார்க்கண்ட் மாநிலம் பர்வத்பூரில் உள்ள சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் 96 மணி நேரம் சிக்கியிருந்த நான்கு சுரங்கத் தொழிலாளர்கள் பத்திரமாகத் வீடு திரும்பினர்.
ஜார்க்கண்ட் மாநிலம் போகாரா பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நிலக்கரி சுரங்கம் நவம்பர் 26ஆம் தேதியன்று இடிந்து விழுந்தது. சுரங்கம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள், ஷ்ரவன் ராஜ்வார், லக்ஷ்மன் ராஜ்வார், அனாதி சிங் மற்றும் பாரத் சிங் ஆகியோர் புதையுண்டனர்.
வழக்கம்போல் தாமதமாக வந்த போலீஸ்
அவர்களைத் தவிர, உள்ளே சிக்கியிருந்த பல தொழிலாளர்கள் அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவம் குறித்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவலர்கள் ஒருநாள் கழித்து நவ.27ஆம் தேதி விசாரணைக்கு உத்தரவிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.
இந்தப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையும் (NDRF) ஈடுபட்டது. இந்நிலையில் கிட்டத்தட்ட 96 மணி நேரத்துக்கு பின்பு சுரங்கத் தொழிலாளர்கள் தாமாகவே வெளியே வந்தனர்.
உயிருடன் திரும்பிய தொழிலாளர்கள்
இவர்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் உதவினர். இது குறித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கூறுகையில், “சுரங்கத்தில் இருந்து வெளியே வர மணிக்கணக்கில் விடா முயற்சியாக தோண்டினோம்.
மூன்று நாள்கள் சுரங்கத்திலிருந்து தண்ணீரை மட்டுமே குடித்தோம். வழியை கண்டறிய முதலில் டார்ச்-ஐ பயன்படுத்தினோம். ஆனால் டார்ச் லைட் பேட்டரி இன்றி ஆஃப் ஆனது.
விழிக்கு வழி காட்டிய தீபம்
தொடர்ந்து, தீபத்தை ஏற்றி வழியை தொடர்ந்தோம். இறுதிவரை நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை, ஒருவழியாக வழியை கண்டுபிடித்துவிட்டோம்” என்றனர்.
இந்நிலையில் சுகாதாரத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று அவர்களின் உடல்நிலையை ஆய்வு செய்தனர். எனினும், கூடுதல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்ல தொழிலாளர்கள் மறுத்துவிட்டனர்.
உறவினர்கள் மகிழ்ச்சி
இந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்த ஷ்ரவன் ராஜ்வரின் மனைவி மீரா தேவி, உள்ளே சிக்கியபோது தனது கணவர் பதிலளித்ததாகவும், சுரங்கப்பாதையில் இருந்து அவரது குரலைக் கேட்டதாகவும் கூறினார்.
மற்றொரு உறவினரான பிரதீப் ராஜ்வார் கூறுகையில், சுரங்கத்தில் சிக்கியிருந்தவர்கள் உதவிக்காக இரைஞ்சும் குரல்கள் கேட்கின்றன. உள்ளூர்வாசிகள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்தும் பெரிய வெற்றியை அடைய முடியவில்லை” என்றார்.
சட்டவிரோத சுரங்கம்
ஜார்க்கண்ட் பர்வத்பூர் நிலக்கரி சுரங்கத்தில் நீண்ட காலமாக சட்டவிரோத சுரங்கம் நடைபெற்று வருகிறது என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: நான்காண்டுகளில் 348 வீரர்கள் ஜம்மு காஷ்மீரில் மரணம் - அமைச்சர் தகவல்