சத்ரபதி சம்பாஜிநகர்: மகாராஸ்டராவில் 14 வயது சிறுமி ஒருவர் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 18 ஆம் தேதி மகாராஸ்டராவின் சத்ரபதி சம்பாஜிநகர் ரயில் நிலையத்தில் சிறுமி சுற்றித் திரிந்து உள்ளார். அவரது நடவடிக்கையால் ரயில்வே போலீசார் சந்தேகமடைந்தனர்.
இதனை அடுத்து ரயில்வே காவல் துறையினர் அச்சிறுமியை சந்தேகத்தின் அடிப்படையில் மீட்டு விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை அச்சிறுமி தெரிவித்து உள்ளார். ரயில்வே போலீசாரின் விசாரணையில் அந்த சிறுமி தனது நண்பர்களால் பலமுறை கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டதை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: Denying sex: ஓராண்டாக தாம்பத்திய உறவை மறுத்த கணவர் மீது மனைவி போலீசில் புகார்!
மேலும் அந்த சிறுமியிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்த போது, அச்சிறுமிக்கு அறிமுகமான நண்பர் அவரை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மேலும் அதனை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளார். அது மட்டுமின்றி அந்த வீடியோவை வலைதளங்களில் பதிவிட்டுவிடுவேன் எனக் கூறி கடந்த 6 மாதங்களாக அந்த நபர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகத் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ரயில்வே காவல் துறையினர், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின் போது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட 6 பேரும் சிறுவர்கள் என தெரிய வந்துள்ளது. பின்னர் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
சம்பவத்தில் ஈடுபட்ட 6 சிறுவர்களில் 4 சிறுவர்களை ரயில்வே துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள 2 சிறுவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். பின்னர் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை ரயில்வே காவல் துறையினர், அப்பகுதி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சிறுமி சமூக நலத்துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: காதலுக்கு தடையாய் இருந்த தாய்.. காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய சிறுமி?