டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு பெண்மணியும், அவரது மகளும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, அப்போதைய அமைச்சராக இருந்த அசம் கான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்மணியின் கணவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், மக்கள் பிரதிநிதிகள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சர்ச்சைக்குரிய வகையிலும், பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் கருத்து தெரிவிப்பதாகவும், அதனால் மக்கள் பிரதிநிதிகள் கருத்து தெரிவிப்பதை முறைப்படுத்த சட்ட விதிகளை இயற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டது. முதலில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்த நிலையில், பிறகு நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு இன்று(ஜன.3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளில் நான்கு பேர், பேச்சுரிமை தொடர்பாக அரசியல் சாசனத்தின் 19ஆவது பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் போதுமானது என்றும், இது பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், மக்கள் பிரநிதிகள் என அனைவருக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் மக்கள் பிரநிதிகளின் கருத்துரிமைகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். அதேபோல், அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கூறும் கருத்துகளுக்கு அரசாங்கத்தை பொறுப்பாக்க முடியாது என்றும், மக்கள் பிரதிநிதிகள் கூறும் அனைத்திற்கும் அவர்கள்தான் பொறுப்பு என்றும் தெரிவித்தனர்.
இந்த அமர்வில் இருந்த பெண் நீதிபதி நாகரத்னா, கருத்துரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடு விதிக்க முடியாது என்பதை தான் ஒப்புக்கொள்வதாகவும், அதேநேரம் அமைச்சர்கள் பேச்சுரிமை என்ற பெயரில் இழிவான கருத்துகளை தெரிவித்தால் அதற்கு சம்மந்தப்பட்ட அரசும் பொறுப்பு என்றும் தெரிவித்தார். இதுபோன்ற வெறுப்பு பேச்சுகள் சமூக சமத்துவத்தை பாதிக்கின்றன என்றும் நீதிபதி நாகரத்னா தெரிவித்தார்.
முன்னதாக நேற்று மத்திய அரசின் பணமதிப்பிழப்பு செல்லும் என உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருந்தது. இந்த அமர்வில் இருந்த நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Supreme Court: பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு