புதிய அணைகளை கட்ட இடம் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதை மேற்கோள்காட்டி பேசிய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், நிலத்தடி நீரை சேகரிப்பதன் மூலமாகவே குடிநீர் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "நிலத்தடி நீரைச் சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, இனிமேலும் பெரிய அணைகளை கட்ட நம்மிடம் இடம் இல்லை என்பது தெரியவருகிறது.
இருப்பினும் அமைச்சகத்தால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் 736 பெரிய அணைகள் உள்ளன. ஒரு அணையை கட்ட நம் மக்களை அப்புறப்படுத்துவது மட்டுமில்லாமல் தண்ணீர் ஓடுவதற்குப் பெரிய இடத்தை கைப்பற்ற வேண்டும்.
எனவே, எதிர்காலச் சந்ததியினருக்கு நிலத்தடி நீரைச் சேகரிப்பதன் மூலமாகவே நாம் உதவிட முடியும். இதன் காரணமாகவே நீர் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். 2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதை நீர்வளத் துறை அமைச்சகம் நோக்கமாக கொண்டுள்ளது" என்றார்.