பாட்னா : பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் எங்களில் ஒருவர் என்றும் மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்து உள்ளார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பீகார் சென்று உள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், "நிதிஷ் குமார் எங்களில் ஒருவர், எந்த நேரத்திலும் அவர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே திரும்பி வரக்கூடும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து பின்னர் அதில் இருந்து அவர் வெளியேறினார். என்னுடையே கேள்வி என்னவென்றால், அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைய விரும்பினால், முதலில் ஏன் எங்களுடன் கூட்டணி சேர வேண்டும்?" என்று ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.
மும்பையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் 3வது கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் நிதிஷ் குமார் கலந்து கொள்ளக் கூடாது என ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்து நிதிஷ் குமார் பீகாரில் ஆட்சி அமைத்தார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருடன் தனக்கு சுமூக உறவு இருப்பதாகவும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ரயில்வே அமைச்சராக இருந்தது முதல் அவருடன் நல்ல உறவு கொண்டு இருப்பதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார். மேலும், நிதிஷ் குமாருக்கு தான் மரியாதை அளிப்பதாகவும், அவர் சிறந்த சமதர்மவாதி என்றும் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
மும்பையில் நடைபெறும் 3வது கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நிதிஷ் குமார் கலந்து கொள்ள கூடாது என்றும், எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ராகுல் காந்தி பரிந்துரைத்த INDIA பெயரில் நீதிஷ் குமாருக்கு உடன்பாடு இல்லை, அவர் மும்பை எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : இம்பால் விரைந்த INDIA கூட்டணியின் பிரதிநிதிகள் குழு.. கலவரம் பாதித்த இடங்களில் ஆய்வு!