மும்பை: மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில், இந்தி சீரியல் நடிகை துனிஷா சர்மா(21) கடந்த 24ஆம் தேதி படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 'அலிபாபா தாஸ்தென்- இ- காபுல்' என்ற சீரியலில், தனது முன்னாள் காதலன் ஷீசன் முகமது கானுடன் துனிஷா சர்மா நடித்து வந்த நிலையில், திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மகளின் தற்கொலைக்கு காரணம் ஷீசன் முகமது கான் என துனிஷா சர்மாவின் தாய் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து நடிகர் ஷீசனை போலீசார் கைது செய்தனர். ஷீசன் முகமது கானும், துனிஷா ஷர்மாவும் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் பிரிந்தார்கள் என்பதால், காதல் தோல்வி காரணமாக துனிஷா ஷர்மா தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
போலீஸ் காவலில் உள்ள ஷீசன் மற்றும் துனிஷாவுடன் நடித்த சக நடிகர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று(டிச.25) சம்பவம் நடந்த படப்பிடிப்பு தளத்தில் 9 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், டெல்லி ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கிற்கு பிறகுதான் துனிஷா- ஷீசன் இடையே விரிசல் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஷீசனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஷ்ரத்தா வாக்கர் கொலை சம்பவத்தால் ஷீசன் அச்சமடைந்ததாகவும், தாங்கள் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலை முறித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மதம் மற்றும் வயதைக் காரணம் காட்டி துனிஷாவை பிரிந்ததாகவும், இதனால் துனிஷா மனமுடைந்து போன நிலையிலும், இருவரும் இணைந்து சீரியலில் நடித்து வந்ததாகவும் தெரிவித்தார். இவர்கள் காதல் முறிவு குறித்தும், மீண்டும் சீரியலில் சேர்ந்து நடித்தது குறித்தும் இருவீட்டாருக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் துனிஷா இதற்கு முன்பே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும், தான் அவரது உயிரைக் காப்பாற்றியதாகவும் ஷீசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகை துனிஷா சர்மா தற்கொலைக்கு காரணம் என்ன தெரியுமா?