மும்பை: கார்டோலியா குரூஸ் போதைப் பொருள் வழக்கில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை, சிக்க வைக்காமல் இருக்க, போதைப் பொருள் தடுப்பு அமைப்பின் முன்னாள் மண்டல இயக்குநர் சமீர் வான்கடே, 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், மே 22ஆம் தேதி வரை, அவர் மீது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ எவ்வித கட்டாய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை 2021-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி போதை பொருள் வழக்கில் கைது செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான், 3 வாரங்களுக்கு பிறகு போதைப் பொருள் வைத்து இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே ஆர்யன் கானை வழக்கில் இருந்து விடுவிக்க ஷாருக்கானிடம், 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக, சமீர் வான்கடே மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அவர் மீது மத்திய புலனாய்வுத் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
இந்த நிலையில் சமீர் வான்கடே மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், தனக்கு எதிரான சி.பி.ஐ. வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க சிபிஐ.க்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆர்யன் கானை கைது செய்ததற்காக பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து உள்ளதாகவும் மனுவில் சமீர் வான்கடே குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி ஷர்மிளா தேஷ்முக் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட சிபிஐ சிறப்பு வக்கீல், ஊழல் தடுப்பு சட்டம் 1988ன் பிரிவு 17 ஏ பிரிவின்படியே, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அனுமதி பெற்று அதன்படியே, பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
சமீர் வான்கடேவின் வக்கீல் ரிஸ்வான் மெர்ச்சண்ட் வாதிட்டதாவது, "வான்கடே மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை. முதல் தகவல் அறிக்கை, பதிவு செய்யப்பட்டு, 4 மாதங்கள் ஆகின்றன. இந்நேரம், துறை ரீதியான விசாரணை முடிந்திருக்க வேண்டும். ஆனால் முடியவில்லை. இந்த நடவடிக்கைகளில், சந்தேகம் ஏற்பட்டதால் தான், தங்கள் தரப்பு, நீதிமன்றத்தை நாடியதாக" தெரிவித்து உள்ளார்.
இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி, சமீர் வான்கடேவை எந்த சூழ்நிலையிலும் 22 ஆம் தேதி வரை காவலில் வைக்கக் கூடாது என்றும் சமீர் வான்கடே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினர். மேலும் வழக்கின் அடுத்த விசாரணையை 22 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.
சமீர் வான்கடேவின் வழக்கறிஞர் ரிஸ்வான் மெர்ச்சன்ட் ஈடிவிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்து உள்ளதாவது, "இந்த விவகாரத்தில், சமூக ஊடகங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்த விதம் அவதூறு பரப்பும் வகையிலேயே உள்ளது. ஷாருக் கானின் இ-மெயில் மூலம் அம்பலமாகி உள்ளது. அதில், சமீர் வான்கடே மீது அவர் எந்த விதமான குற்றச்சாட்டுகளையும் கூறவில்லை.
மாறாக, அவர் மீது அனுதாபம் மட்டுமே தெரிவித்து உள்ளார். எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகள் முடிவுக்கு வரவில்லை. ஆனால் என்சிபியின் சில அதிகாரிகள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி சமீர் வான்கடே மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக" குறிப்பிட்டு உள்ளார்.
இதனிடையே, நீதிமன்றத்தின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் பொய்யான குற்றச்சாட்டுகளில் இருந்து தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் சமீர் வான்கடே பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து உள்ளார்.