மும்பை: நிலுவையில் உள்ள வாட் வரியை செலுத்தும்படி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு மும்பை விற்பனை வரி ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அனுஷ்கா சர்மா சார்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதில், அனுஷ்கா சர்மா தனது வரி ஆலோசகர் ஸ்ரீகாந்த் விகாகர் மூலம் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் நிதின் ஜம்தார் மற்றும் கவுரி கோட்சே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வரி ஆலோசகர் மூலம் மனுதாக்கல் செய்ததற்காக நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
வரி ஆலோசகர் மூலம் மனுதாக்கல் செய்யும் வாய்ப்புகளோ, சாத்தியமோ சட்டத்தில் உள்ளதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அனுஷ்கா சர்மா நேரடியாக மனுக்களை தாக்கல் செய்யாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினர். பின்னர் இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.