புதுச்சேரி : புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, கடந்த நவம்பர் 30 அன்று காலை, நடைபயிற்ச்சி மேற்கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்தது. இதையடுத்து மணக்குள விநாயகர் கோவிலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, யானை லட்சுமியை, ஊர்வலமாக கொண்டு சென்று அன்று மாலையில் கடலூர் சாலையில் உள்ள வனத்துறைக்கு அருகாமையில் ஸ்ரீ காளத்தீசுவரர் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஜே.வி.எஸ் நகரில் அடக்கம் செய்தனர். இரண்டு நாட்களாக மக்கள் சமாதியிலும், லட்சுமி யானை உயிரிழந்த இடத்திலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், யானை லட்சுமியின் நினைவிடத்தில், நான்கு அடி பீடமும், இரண்டு அடி சாய்ந்த நிலையில் 1200 கிலோ கொண்ட யானை லட்சுமி உருவத்தில் கற்சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை பிரதிஷ்டை செய்து, புனித நீர் ஊற்றி தீபாரதனை காண்பிக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்க்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாண்டி மெரினாவில் நடந்த வாக்காளர் சிறப்பு முகாம் தேர்தல் விழிப்புணர்வு முகாமில் இறந்த யானை லட்சுமிக்கு மணற்சிற்பம் வாயிலாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
யானை லட்சுமி 1995-ல் முன்னாள் முதல்வர் ஜானகு ராமன் மூலம் மணக்குள விநாயகர் கோயிலுக்கு வழங்கப்பட்டது. அப்போது அதற்கு ஐந்து வயது இருக்கும். அன்று முதல் கோயிலுக்கு வரும் அனைத்து மக்களுக்கும் ஆசி வழங்கி வந்தது. புதுச்சேரி மக்களிடமும், கோயிலுக்கு வரும் பக்தர்களிடமும் யானை லட்சுமி அன்பாக பழகிவந்தது. சமீப காலமாக நீரிழிவு நோயால் யானை லட்சுமி அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடைபயிற்ச்சி மேற்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கருவுற்ற பசு மாட்டின் வயிற்றில் இத்தனை கிலோ பிளாஸ்டிக்கா?