பெங்களூரு: மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கியதைக் கண்டித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நேற்று (மார்ச் 21) நிறைவேற்றப்பட்டது. மேலும், மேகதாது அணை கட்டக்கூடிய கர்நாடகாவின் முயற்சிகளை தமிழ்நாடு அரசு எல்லா வடிவிலும் எதிர்க்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசின் தீர்மானத்திற்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று கண்டனம் தெரிவித்தார். ஒரு மாநிலத்தின் உரிமையை, மற்றொரு மாநிலம் பறிக்கும் விதத்தில் உள்ள தமிழ்நாட்டின் தீர்மானம் மக்கள் விரோதமானது என்றும்; நாட்டின் அமைப்பு மீது தமிழ்நாட்டிற்கு நம்பிக்கை இல்லை என்பதைத்தான் இந்தத் தீர்மானம் குறிக்கிறது எனவும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்.
'தமிழ்நாட்டுக்கு பிரச்னையில்லை'
இந்நிலையில், மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் தீர்மானத்தைக் கண்டித்து கர்நாடக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். காங்கிரஸ் உறுப்பினர் ஹெச்.கே பட்டீல் தமிழ்நாட்டின் தீர்மானத்தை அவையின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதைத்தொடர்ந்து, பசவராஜ் பொம்மை,"மேகதாது அணைத்திட்டம் என்பது குடிநீர் மற்றும் மின்சாரம் சார்ந்த வளர்ச்சி திட்டமாகும்.
இதனால், தமிழ்நாட்டிற்கு எந்த பிரச்னையும் இல்லை. தமிழ்நாடு உபரி நீரை பயன்படுத்துவதற்கு திட்டமிடுகிறது. மேலும், எவ்வித அனுமதியும் இன்றி அதுபோன்ற திட்டத்திற்கு தமிழ்நாடு அடிக்கல் நாட்டுகிறது என நமது கவனத்திற்கு வந்துள்ளது. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைக் குறித்து தமிழ்நாடு அரசு பேசிவருகிறது. இது நம்முடைய நீர் உரிமைக்குப் பேரிடியாகும். நமது எதிர்ப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும்.
'புலம்பக் கூடாது'
நாம் காவிரி நீர் பயன்படுத்தும் போதெல்லாம், தமிழ்நாடு அதை தடுக்கிறது. நீர் உரிமைக்காக புலம்புவது நல்லதல்ல. தமிழ்நாட்டின் முடிவு சட்டவிரோதமானது. நமது முடிவு தெளிவாக இருக்கிறது. சட்ட வல்லுநர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்திய பின், நாளை அவையில் அனைவரின் முன் நமது முடிவை முன்வைக்கிறேன். மேகதாதுவில் அணை கட்ட சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். இந்த திட்டத்தை செயல்படுத்தியே தீர்வோம்" எனத் தெரிவித்தார்.
மேலும், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா சட்டப்பேரவையில் தெரிவிக்கையில், "தமிழ்நாட்டின் முடிவை நம் மாநிலமோ அல்லது ஒன்றிய அரசோ ஏற்கத் தேவையில்லை. தமிழ்நாடு தீர்மானத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். முதலமைச்சர் உடனடியாக டெல்லி சென்று ஒன்றிய நீர்ப்பாசனத்துறை அமைச்சரை சந்தித்து சுற்றுச்சூழல் துறையிடம் விரைவில் அனுமதி பெற வேண்டும்.
'இது ஒன்றும் புதிதல்ல'
மேகதாது விவகாரத்தைப் பொறுத்தவரை, நாங்கள் தமிழ்நாட்டில் இல்லை. நிலம், நீர், மொழி என அனைத்தும் அனைவருக்கும் ஒன்றே. நாம் நமது உரிமைக்காகப் போராடுகிறோம். பேரவை உறுப்பினர்களின் கருத்துகளை பெற்று, தீர்மானத்தை நிறைவேற்றிய பின் அதை ஒன்றிய நீர்ப்பாசனத்துறை அமைச்சகத்தில் சமர்ப்பிப்போம்.
தமிழ்நாடு ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுதான் வருகிறது. இப்போது, அவர்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது ஒன்றும் புதிதல்ல, இதுபோன்ற சூழலை பலமுறை பார்த்துள்ளோம்" என்றார்.
இதைத்தொடர்ந்து, கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர்கள் ஹெச்.டி. குமாரசாமி, சித்தராமையா ஆகியோரும் சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.