பெங்களூர்: கோவிட் -19 காரணமாக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் நடைபெற்ற மூன்றாவது மெகா லோக் அதாலத்தின் மூலம் மொத்தம் மூன்று லட்சத்து 32 ஆயிரத்து 936 வழக்குகளை தீர்த்துவைத்து கர்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையம் புதிய சாதனை படைத்துள்ளது. இதனை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியும், கே.எஸ்.எல்.எஸ்.ஏ.வின் நிர்வாகத் தலைவருமான அரவிந்த்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நீதித்துறை அலுவலர்கள், ஊழியர்கள், வழக்கறிஞர்களின் கடின உழைப்பினால் தான் இது சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மெகா-லோக் அதாலத்தின் மூலம் ஐந்து லட்சத்து 44 ஆயிரத்து 376 வழக்குகள் அடையாளம் காணப்பட்டன. அவைகளில் மூன்று லட்சத்து 32 ஆயிரத்து 936 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இதில் பயனாளர்களுக்கு கிடைக்கவேண்டிய 1,033 கோடி ரூபாய் நிதியை வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.
அரசாங்கம் மொத்தம் 41.59 கோடி ரூபாய் அபராதம் வசூலித்ததுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு 123.76 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நீதிபதிகளின் சம்பளத்திற்கு 189.19 கோடி ரூபாயும், மாநில சேமிப்பு நிதிக்கு 140.83 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3,853 நிலத் தகராறுகள் தொடர்பான வழக்குகள் இதன் மூலம் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளன.