மீரட்(உத்தரபிரதேசம்): இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுள் முக்கியமான ஒன்று வரதட்சணை கொடுமையாகும். இதனை தடுக்க அரசு தரப்பில் இருந்து சட்டங்கள் போட்ட பின்னும் இக்கொடுமை இன்னும் ஒழிந்த பாடில்லை.
இதே போன்று உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. மீரட் காவல்நிலையத்தில் வரதட்சணையாக புல்லட் பைக்கை மனைவி கொடுக்கத் தவறியதால், மனைவியை அடித்து, தலையை மொட்டையடித்து, முத்தலாக் கொடுத்ததாகக் கூறி, ஒருவர் மீது காவல்துறையினர் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 21) வழக்கு பதிவு செய்தனர்.
அப்சல்பூர் பூட்டியில் வசிக்கும் அகமது அலி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாகவும், அதன்பிறகு அவர் தனது மனைவியிடமிருந்து புல்லட் பைக்கை வரதட்சணையாகக் கோரி வருவதாகவும் உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்ற மாதம் ஜூன் 7ஆம் தேதி பாதிக்கப்பட்ட அவர், தாய் வீட்டிற்குச் சென்றார். ஆகஸ்ட் 14ஆம் தேதி கணவர் வீட்டிற்கு சென்ற போது அவர் முத்தலாக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் ஆனதில் இருந்து தனது கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை அடிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து... பாஜக எம்எல்ஏ கைது