டெல்லி: 250 வார்டுகளுக்கு நடந்த டெல்லி மாநகராட்சி தேர்தலில், 134 வார்டுகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. 15 ஆண்டுகளாக பாஜக கட்டுப்பாட்டில் இருந்த மாநகராட்சியை முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி தன் வசப்படுத்தி உள்ளது. இந்நிலையில் டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்கள் குறித்த ரூசிகர தகவல்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் டெல்லி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது, ஆம் ஆத்மி வெற்றி பெற்ற 134 இடங்களில், 77 வார்டுகள் பா.ஜ.க.விடம் இருந்து கைப்பற்றப்பட்டது. வெற்றி பெற்ற கவுன்சிலர்களில் 17 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், அதிலும் 8 சதவீதம் கவுன்சிலர்கள் தீவிர வழக்குகளின் விசாரணை வளையத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
250 வார்டு கவுன்சிலர்களில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்றும், அதிகபட்சமாக டெல்லி கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநிவாசபுரியில் வெற்றி பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் ராஜ்பால் சிங்குக்கு 47 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றபடி ஒட்டுமொத்த கவுன்சிலர்களில் 51 பேர் சதவீதம் பேர் 12ஆம் வகுப்பு கல்வித் தகுதியை தாண்டாதவர்கள் என்றும், 66 சதவீதம் பேர் 41 முதல் 70 வயதிற்குட்பட்டவர்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற கவுன்சிலர்களில் 132 பேர் பெண்கள் என்றும் கடந்த 2017ஆம் ஆண்டை காட்டிலும், ஒரு சதவீதம் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் தாக்கல் செய்த ஆணைப் பத்திரத்தில் தெரிவித்த தகவல்களை கொண்டு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை காவல் துறையின் CCTV-களை சேதப்படுத்திய மாண்டஸ் புயல்!