அகர்தலா: திரிபுரா முதல் அமைச்சர் பிப்லப் குமார் தேப் மே.14ஆம் தேதி பதவி விலகிய நிலையில், மாணிக் சஹா முதல் அமைச்சராக மே15ஆம் தேதி பொறுப்பெற்றுக் கொண்டார்.
இவரின் பதவியேற்பு விழா ராஜ் பவனில் இன்று காலை 11.30 மணிக்கு மிக எளிமையாக நடைபெற்றது. அப்போது அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். மாணிக் சஹாவுக்கு கவர்னர் சத்யதியோ நாராயண் ஆர்யா பதவிப் பிரமாணம் மற்றும் இரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார்.
அடுத்தாண்டு (2023) மார்ச் மாதம் சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில் திரிபுராவில் புதிய முதல் அமைச்சராக மாணிக் சஹா பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். தற்போது முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாணிக் சஹா ஒரு பல் மருத்துவர் ஆவார், இவர், பல் மருத்துவக் கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார். 69 வயதான சஹா, வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
காங்கிரஸ் கட்சியை பூர்விகமாக கொண்ட இவர், 2016ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 2020ஆம் ஆண்டு கட்சியின் தலைவராக உயர்ந்தார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆன மாணிக் சஹா, தற்போது பாஜக தேசிய தலைமையால் மாநிலத்தின் முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிப்லப் குமார் தேவ், திரிபுராவில் 25 ஆண்டுகால கம்யூனிட்ஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் ராஜினாமா!