ரேவா : மத்திய பிரதேசத்தில் பணத் தகராறில் அரை நிர்வாணமாக இளைஞரை கட்டி வைத்து பஞ்சாயத்து தலைவரின் கணவர் கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கு பிறகு அனைவரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலம் பிபர்ஹி கிராமத்தை சேர்ந்தவர் ஜவஹர் சிங். இவரது மனைவி பஞ்சாயத்து தலைவாரக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும், ஜவஹர் சிங்கிற்கு இடையே பணத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. நில விவகாரம் மற்றும் வாடகைக்கு வாகனம் எடுத்ததில் பாக்கித் தொகையை அந்த இளைஞர் செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தன் இருப்பிடத்திற்கு இளைஞரை வரவழைத்த அந்த பெண் பஞ்சாயத்து தலைவரின் கணவர் ஜவஹர் சிங், இளைஞரின் கையை பின்னால் கட்டி வைத்து அரைநிர்வாணமாக்கி தாக்கி உள்ளார். இந்த சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இளைஞர் அரை நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட நிலையில், நீண்ட நேரத்திற்கு அப்படியே விடப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இது குறித்து வெளியே கூறக் கூடாது என இளைஞரை ஜவஹர் சிங் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. ஜவஹர் சிங் தாக்கியதை அருகில் இருந்த அவரது சகாக்கள் வீடியோ எடுத்த நிலையில், கடந்த வாரம் அந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து வீடியோவை கண்ட போலீசார், பாதிக்கப்பட்ட இளைஞரை அழைத்து புகார் பெற்று உள்ளனர்.
இதுகுறித்து பேசிய இளைஞர், கடந்த 2021ஆம ஆண்டு மே மாதம் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்து உள்ளார். ஜவஹர் சிங்குடன் ஏற்பட்ட நிலத் தகராறு மற்றும் வாடகைக்கு வாகனம் பெற்றதில் பாக்கித் தொகை செலுத்தாதது உள்ளிட்ட காரணங்களுக்காக தாக்கப்பட்டதாக அவர் கூறி உள்ளார்.
மேலும், இளைஞரை தாக்கியதாக பஞ்சாயத்து தலைவர், அவரது கணவர் ஜவஹர் சிங், மற்றும் கூட்டாளிகள் இரண்டு பேர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த வாரம் வீடியோ வெளியாகி வைரலான பின் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
இதையும் படிங்க : நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு.. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசர தரையிறக்கம்!