மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று கிரண்சுஜா ஹோனவார் என்பவர் பெண் பயணி ஒருவரின் வலது கன்னத்தில் வலுக்கட்டாயமாக திடீரென முத்தமிட்டார்.
இதை சற்றும் எதிர்பாராத அந்தப் பெண் பயணி கூச்சலிட்டார். பெண்ணின் கூச்சல் சப்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்தனர். தொடர்ந்து, அந்த பெண் பயணி, ஹோனவார் என்ற இளைஞர் மீது ரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்தார்.
மும்பை ரயில் நிலையத்திற்குள் ரயில் வண்டி நுழையும் போது ஹோனவார் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவமானம் அடந்த பெண்மணி மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில், ஹோனவாருக்கு எதிராக ஐபிசி 354, 354(A) (1) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. துணை ஆய்வாளர் கணபத் கோண்ட்கே வழக்கை விசாரித்தார்.
இந்த விசாரணையில் சம்பவத்தன்று பயணம் செய்த பலரிடம் விசாரிக்கப்பட்டு ஹோனவார் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து தற்போது ஹோனவாருக்கு ஒரு வருட சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல்துறை வழக்கறிஞர் கடோர் சாயிக் இந்த வழக்கில் அரசு சார்பாக பணியாற்றினார். இதற்கிடையில், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:ரயிலில் கடத்தி வரப்பட்ட 14 கிலோ கஞ்சா பறிமுதல்