அமராவதி: ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த சிவக்குமார் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இன்று (ஏப். 23) அதிகாலையில் படுக்கையறையில் சார்ஜ் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் சிவக்குமார், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் படுகாயமடைந்தனர். அவர்களின் கதறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதீத தீக்காயங்கள் ஏற்பட்டதால் சிவக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சிவக்குமார் நேற்று (22-4-2022) வாங்கியுள்ளார். வாங்கிய ஒரே நாளில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் கடந்த 19-ம் தேதி, தெலங்கானாவில் நிஸாமாபாத் மாவட்டத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து 80 வயது முதியவர் உயிரிழந்தார். பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக ஏராளமான மக்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், அடுத்தடுத்து இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.