உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் ஒருவர் பல் துலக்கும் ப்ரஷ்ஷை விழுங்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் நாணயங்கள், மோதிரங்கள், ஊக்கு (safety pin) உள்பட பிற ஏதேனும் சிறிய பொருட்கள் போன்றவற்றை விழுங்குவதை நாம் அனைவரும் கேள்விபட்டிருப்போம். ஆனால், உதய்ப்பூரில் 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், 12 சென்டி மீட்டர் நீளமுள்ள பல் துலக்கும் பிரஷ்ஷை விழுங்கியுள்ளார். இந்த நிகழ்வு மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உதய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சித்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பல்துலக்கும் போது குமட்டல் ஏற்பட்டு பல் துலக்கும் ப்ரஷ் அவரது தொண்டைக்குள் சிக்கி உள்ளது. இதை அவர் உணரும் நேரத்திற்குள் பல்துலக்கும் ப்ரஷ் அவரது வயிற்றுக்குள் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் ப்ரஷ்ஷை வெளியில் எடுப்பதற்கு முயற்சி செய்து உள்ளார். ஆனால், அவரின் அனைத்து வகையான முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்து உள்ளது.
இதனால் அந்த நபரை, அவரின் உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். ஆனால், அந்த மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் வயிற்றுக்குள் இருக்கும் ப்ரஷ்ஷை அகற்ற முடியவில்லை என கூறியுள்ளனர். இதனால், அந்த நபரை ஜிபிஹெச் அமெரிக்கன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் (CT Scan) செய்து பரிசோதித்து உள்ளனர்.
அப்போது அவரது வயிற்றின் மேல் பகுதியில் பல் துலக்கும் ப்ரஷ் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் ஷஷாங்க் ஜே திரிவேதி, எண்டோஸ்கோபி (endoscopy) மூலம் அவரது வயிற்றுக்குள் இருக்கும் ப்ரஷ்ஷை அகற்ற முடிவு செய்துள்ளார். பின்னர், அனஸ்தீசியா (anaesthesia) எனப்படும் மயக்க மருந்துப் பிரிவு மருத்துவர் தருண் பட்நாகர் மற்றும் விகாஸ் அகர்வால் ஆகியோர் எண்டோஸ்கோபிக் செயல் முறைக்கு தயாராகினர்.
பின்னர், அறுவை சிகிச்சை நிபுணர் ஷஷாங்க் ஜே திரிவேதி, எண்டோஸ்கோபிக் மூலம் வாய் வழியாக 12 சென்டி மீட்டர் நீளமுள்ள பல் துலக்கும் ப்ரஷ்ஷை அகற்றினார். இது குறித்து பேசிய டாக்டர் ஷஷாங்க் ஜே திரிவேதி, “இது போன்று பல் துலக்கும் ப்ரஷ்ஷை விழுங்கிய சம்பவங்கள், உலக அளவில் மொத்தம் 50 சம்பவங்களே பதிவாகி உள்ளன. முன்னதாக இது போன்ற சம்பவம் கடந்த 2019ஆம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
வயிற்றில் இருந்த ப்ரஷ்ஷை எந்த வித கீறலும் இல்லாமல் வெளியில் எடுக்கப்பட்டது ராஜஸ்தானில் இதுவே முதல் முறையாகும். ப்ரஷ் அகற்றப்பட்ட பின்னர் எண்டோஸ்கோபிக் மூலம் நோயாளியின் குடல் வரை முழுவதுமாகப் பரிசோதிக்கப்பட்டது. எந்த பாதிப்பும் இல்லை. ஒரு நாள் மட்டும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். மேலும் இந்த நிகழ்வு பொது அறுவை சிகிச்சை மற்றும் உலக சுகாதார அமைப்பு பதிவுகளில் பதிவு செய்ய அனுப்பப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: Seema-Sachin love story: பாகிஸ்தான் பெண்ணிடம் ஏடிஎஸ் அதிகாரிகள் கேட்ட 13 கேள்விகளும் அவரின் பதில்களும்!