கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மிதுனபுரி மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நந்திகிராம் தொகுதியிலுள்ள ரேயேபாரா தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை பிடித்து சிலர் கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரேயேபாரா பகுதியில் உள்ள கோயிலுக்கு செல்ல நான் திட்டமிட்டிருந்தேன். அதன்படி அங்கு சென்றபோது சிலர் என்னை சூழ்ந்துக்கொண்டு கார் கதவை தள்ளினார்கள்.
இதில் எனது காலில் கார் கதவு பட்டு, கால் இரத்தம் கட்டி வீங்கியது. இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது என் அருகில் காவலர்கள் உள்பட யாரும் இல்லை. இது திட்டமிட்ட சதி” எனக் கூறினார்.
இந்நிலையில் மம்தா பானர்ஜியின் இடுப்பு பகுதியிலும் காயம் ஏற்பட்டிருப்பதாக அக்கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை இச்சம்பவம் ஏற்படுத்திய நிலையில் மாநில ஆளுநர் ஜகதீப் தன்கர் மம்தா பானர்ஜி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக தலைமை செயலரிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மம்தா பானர்ஜியின் மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், “மம்தா பானர்ஜியின் இடது கால் மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் கடுமையான எலும்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் தோள்பட்டை, முன்கை மற்றும் கழுத்தில் காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நந்திகிராம் தொகுதியில் காயமுற்ற மம்தா பானர்ஜி நந்திகிராமில் இருந்து சாலை வழியாக கொல்கத்தாவின் எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜியின் மருத்துவர், “மம்தா பானர்ஜிக்கு கால் மற்றும் தோள் பட்டை பகுதிகளில் காயங்கள் இருந்தன” என்று கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: விஜய பிரபாகரன் விட்ட சவால் முதல் சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சு வரை: இன்றையத் தேர்தல் சரவெடிகள்