மேற்குவங்கம்: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கடந்த 2ஆம் தேதி, கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். சுமார் 1,000 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. படுகாயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பள்ளிக் கல்விக்கான செலவை அதானி குழுமம் ஏற்கும் என கெளதம் அதானி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இன்று (ஜூன் 5) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், விபத்தில் கை, கால்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்தார். விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து மன மற்றும் உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டவர்களுக்கும் நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 206 பேர் காயமடைந்து ஒடிசாவின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், தான் நாளை புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கிற்கு சென்று அங்கு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
விபத்து தொடர்பாக எந்த அரசியலிலும் ஈடுபட விரும்பவில்லை என்றும், காயமடைந்த பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்வேன் என்றும் தெரிவித்தார். வரும் 7ஆம் தேதி ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள், கை கால்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான ஆணை வழங்கப்படும் என்றும், நிவாரண உதவித்தொகையும் அன்றைக்கே வழங்கப்படும் என்றும் கூறினார்.
அப்போது, ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும், இதுபோன்ற விஷயங்களில் உண்மையை மறைக்கக்கூடாது என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 3ஆம் தேதி, ரயில் விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்த மம்தா பானர்ஜி, விபத்து நடந்த ரயில் பாதையில் ரயில் மோதலை தடுக்கும் கவாச் அமைப்பு ஏன் இல்லை? என்று கேள்வி எழுப்பினார். கவாச் அமைப்பு இருந்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது என்றும் தெரிவித்தார். ஆனால், கவாச் அமைப்புக்கும் விபத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.