புதுச்சேரி : புதுச்சேரியில் தற்போதைய மாநிலங்களவை எம்பியாக உள்ள கோகுல கிருஷ்ணன் பதவிகாலம் அக்டோபர் மாதத்துடன் நிறைவடைகிறது.
புதிய உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. மாநிலங்களவை சீட் யாருக்கு என்ன பாஜக, என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளிடையே பரபரப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தீவிரம் காட்டி வருகிறார்.
இதற்காக கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது ரங்கசாமியை தனது தொகுதியில் போட்டியிட வைத்து தனது தொகுதியை விட்டுக் கொடுத்தார். ஆனால் ரங்கசாமி தோல்வியைத் தழுவினார்.
மேலும் சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு நிதி உதவி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது அமைச்சராக பதவி வகித்த மல்லாடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸிலிருந்து வெளியேறிய நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன், தற்போதைய என்.ஆர்.காங் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆறுமுகம் ரமேஷ் ஆகியோரை அக்கட்சியில் இணைய பின்னணியிலிருந்து இயக்கியவர் மல்லாடிகிருஷ்ணராவ் என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன.
இதற்கிடையில் மாநிலங்களவை சீட்டை பெறுவதற்கு பாஜகவும் தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் அமைச்சராக மல்லாடி கிருஷ்ணாராவ் கடந்த முறை அமைச்சர்பதவி வகித்த போது நடந்த மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட தீவிரம் காட்டினார். கடைசி நேரத்தில் அந்த முயற்சி தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில் தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற தீவிரம் காட்டி வருகின்றார். இதற்காக திமுக மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவையும் திரட்டிவருகிறார்.
இதையும் படிங்க : மக்கள் பணத்தை வீணடிக்கும் கிரண்பேடி - பரபரப்பு புகார்!