கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியைச் சேர்ந்த மரியும்மா மயானலி(99), மலபார் சுற்றுவட்டாரத்தில் ஆங்கில வழிக் கல்வி பயின்ற முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமைக்குரியவர். இஸ்லாமிய பழமைவாத குடும்பங்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும், அரபியை தவிர பிற மொழிகளை கற்கவும் தடை விதித்திருந்த காலத்திலேயே பள்ளி சென்று படித்தவர்.
கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்த அவரது பெற்றோர், 1938ஆம் ஆண்டு தலச்சேரியில் கிறிஸ்துவ மிஷனரிகளால் நடத்தப்பட்ட பள்ளியில் அவரை சேர்த்து படிக்க வைத்தனர். அவர் பள்ளி செல்லும்போது, அவரது சொந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே அவரை அவமதித்து, துன்புறுத்தினர். ஆனால், தனது நிலையில் உறுதியாக இருந்த அவர் எல்லாவற்றையும் கடந்து படித்தார். தற்போதைய பத்தாம் வகுப்பு இணையான பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தனது குடும்பத்தினரின் ஒத்துழைப்பால் தனது படிப்பை தொடர்ந்தார். பிற்காலத்தில் பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டார். கேரளாவில் உள்ள இஸ்லாமிய பெண்களின் கல்விக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் சேவை செய்தவர். இந்த நிலையில், மரியும்மா முதுமை காரணமாக தனது 99 வயதில் உயிரிழந்தார்.