அகமத்நகர்: எச்3 என்2(H3N2) எனப்படும் இன்புளுயன்சா வைரஸ் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிரமாக பரவி வருகிறது. கரோனா போன்றே இந்த வகை வைரஸ் காய்ச்சலுக்கும் சளி, தும்மல், இருமல், சுவாச பிரச்சினைகள் உள்ளிட்ட பாதிப்புகள் அறிகுறிகளாக காணப்படுகின்றன. இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் முதல் முறையாக இன்புளுயன்சா வைரஸ் பாதிப்புக்குள்ளான இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த 23 வயது மாணவர், அண்மையில் அலிபாக் டவுனுக்கு சுற்றுலா சென்று உள்ளார். சுற்றுலா முடிந்து திரும்பி வந்தவருக்கு தொடர் உடல் உபாதைகள், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டு உள்ளன.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொடர் சிகிச்சையில் இருந்த மாணவர் கடந்த திங்கட்கிழமை இரவு 10.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை உறுதி செய்த சுகாதாரத்துறை, இது தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்து உள்ளது.
இளைஞரின் மரணம் குறித்து மருத்துவ அதிகாரி கூறுகையில், "இளைஞருக்கு வேறு இரண்டு வகை நோய் பாதிப்புகள் இருந்து உள்ளன. மேலும் அவருக்கு கரோனாவும், எச்3என்2 ஆகிய இரு பாதிப்புகளும் கண்டறியப்பட்டு உள்ளன. மருத்துவ பரிசோதனை முடிவுக்கு பின்னரே அவர் எந்த காரணத்திற்காக உயிரிழந்தார் என்பது தெரிய வரும்" என்றார்.
இதேபோல் நாக்பூரிலும், எச்3என்2 பாதித்த 4 வயது சிறுமி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அதில் 4 வயது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் வைரல் காயச்சல் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா சுகாதாரத் துறை அமைச்சர் தனாஜி சாவந்த், "அமகது நகர் மற்றும் நாக்பூர் பகுதியில் வைரஸ் பாதித்த இருவர் உயிரிழந்ததாக செய்திகள் பரவி வருகின்றன. இருவரின் மரணத்திற்கான காரணங்கள் பரிசோதனை முடிவுகளுக்கு பின்னர் அறிவிக்கப்படும்.
உயிரிழந்தவர்களுக்கு ஏற்கனவே இணை நோய்கள் இருப்பதால் எந்த காரணத்தால் அவர்கள் இறந்தார்கள் என்பது சோதனை முடிவுகளுக்கு பின்னரே தெரிய வரும் என்றார். இந்த நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் பொது மக்கள் 15 முதல் 20 நாட்களுக்கு சளி மற்றும் இருமல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். அதேநேரம் 4 முதல் 5 நாட்களில் இந்த நோய் குணமடைந்து விடும்" என்றார்.
முன்னதாக கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியைச் சேர்ந்த 85 வயதான ஹயர் கவுடா என்பவருக்கு, எச்3என்2 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல் ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தை சேர்ந்த 56 வயது முதியவர், ரோட்டக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கும் பரிசோதனை செய்யப்பட்ட போது வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. தொடர் சிகிச்சையில் இருந்த அவரும் சிகிச்சை பலனின்றி கடந்த 10ஆம் தேதி உயிரிழந்தார். கடந்த 14ஆம் தேதி எச்3என்2 வைரஸ் பாதித்த குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த மூதாட்டியும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருச்சி சிவா - கே.என்.நேரு ஆதரவாளார்கள் மோதல்: காவல் நிலையம் சூறையாடல்; பெண் காவலர் காயம்!